தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளம்

முஸ்லிம்கள் மீதான அவப்பெயர் நீங்க என்ன வழி

بسم الله الرحمن الرحيم

முஸ்லிம்கள் மீதான அவப்பெயர் நீங்க என்ன வழி

ஷவ்வால்-19     -     14-07-2017

 

சர்வதேச அளவில் குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும் பல்வேறு வகையில் ஒதுக்கப்படுகிறார்கள். வஞ்சிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் மீதான வெறுப்புணர்வு விதைக்கப் படுகிறது. எதுவரையெனில் இப்படியே போனால் நடுரோட்டில் ஒரு முஸ்லிமை அநியாயமாக அடித்துக் கொன்றாலும் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்களே தவிர ஒருவரும் காப்பாற்ற முன் வர மாட்டார்கள். பரிதாபப் படவும் மாட்டார்கள். அடிப்பதை வீடியோவும் எடுத்து அதை பல்வேறு ஊடகங்களில் ஒலி பரப்பவும் செய்கிறார்கள். ஏனெனில் முஸ்லிம்கள் என்றாலே கொல்லப்பட்ட வேண்டியவர்கள் என்ற வெறுப்புணர்வு வீடு வீடாகச் சென்று பாசிசவாதிகளால் விதைக்கப்படுகிறது. இந்நிலையை மாற்ற வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் யாரேனும் மேடையில் பேசினால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஒழித்துக் கட்டப்படுகிறார்கள். ஆக இந்நிலையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும். துஆ என்பது மிகப் பெரும் ஆயுதம். அதை நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இது தவிர இன்னொரு வழியும் இருக்கிறது அதுவும் நபி ஸல் கடை பிடித்த வழிமுறை தான். அதன் மூலமே இஸ்லாம் இந்த அளவுக்கு வளர்ந்த து. அது என்ன.. அது தான் அனைத்து மதத்தவரிடமும் மனித நேயத்தை வெளிப்படுத்துவது. அனைவருக்கும் இயன்ற வகையில் உதவி, உபகாரங்கள் செய்வது, ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றுவது, இயலாதவரை ஆதரிப்பது ஆகிய பல்வேறு மனித நேயப் பணிகள் நம் கண் முன்னால் காத்துக் கிடக்கின்றன. அதை நாம் செய்வதில் மிகவும் பின் தங்கி இருக்கிறோம். நபி ஸல் அண்டை வீட்டாரிடம்  எத்தகைய மனித நேயத்தை வெளிப்படுத்தினார்களோ அத்தகைய மனித நேயத்தை நாம் வெளிப்படுத்தவில்லை

ஈமானுக்கு அடுத்து அமலே சாலிஹ் என்று 50 க்கும் அதிகமான இடங்களில் அல்லாஹ் கூறுவதில் மனித நேயமும் அடங்கும்

وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)

நபி ஸல் அவர்களின் பரம எதிரியான ஸுமாமா உற்ற நண்பராக மாறிய காரணம் மாநபியின் மனித நேயம்

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ فَقَالَ عِنْدِي خَيْرٌ يَا مُحَمَّدُ إِنْ تَقْتُلْنِي تَقْتُلْ ذَا دَمٍ وَإِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ مِنْهُ مَا شِئْتَ فَتُرِكَ حَتَّى كَانَ الْغَدُ ثُمَّ قَالَ لَهُ مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ قَالَ مَا قُلْتُ لَكَ إِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ فَتَرَكَهُ حَتَّى كَانَ بَعْدَ الْغَدِ فَقَالَ مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ فَقَالَ عِنْدِي مَا قُلْتُ لَكَ فَقَالَ أَطْلِقُوا ثُمَامَةَ فَانْطَلَقَ إِلَى نَجْلٍ قَرِيبٍ مِنْ الْمَسْجِدِ فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ يَا مُحَمَّدُ وَاللَّهِ مَا كَانَ عَلَى الْأَرْضِ وَجْهٌ أَبْغَضَ إِلَيَّ مِنْ وَجْهِكَ فَقَدْ أَصْبَحَ وَجْهُكَ أَحَبَّ الْوُجُوهِ إِلَيَّ وَاللَّهِ مَا كَانَ مِنْ دِينٍ أَبْغَضَ إِلَيَّ مِنْ دِينِكَ فَأَصْبَحَ دِينُكَ أَحَبَّ الدِّينِ إِلَيَّ وَاللَّهِ مَا كَانَ مِنْ بَلَدٍ أَبْغَضُ إِلَيَّ مِنْ بَلَدِكَ فَأَصْبَحَ بَلَدُكَ أَحَبَّ الْبِلَادِ إِلَيَّ وَإِنَّ خَيْلَكَ أَخَذَتْنِي وَأَنَا أُرِيدُ الْعُمْرَةَ فَمَاذَا تَرَى فَبَشَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَهُ أَنْ يَعْتَمِرَ فَلَمَّا قَدِمَ مَكَّةَ قَالَ لَهُ قَائِلٌ صَبَوْتَ قَالَ لَا وَلَكِنْ أَسْلَمْتُ مَعَ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا وَاللَّهِ لَا يَأْتِيكُمْ مِنْ الْيَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ حَتَّى يَأْذَنَ فِيهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (بخاري) باب وَفْدِ بَنِى حَنِيفَةَ ، وَحَدِيثِ ثُمَامَةَ بْنِ أُثَالٍ .-كتاب  المغازى

நபி ஸல் அவர்கள் மாற்றார்களின் உள்ளங்களை எவ்வகையில் ஈர்த்தார்கள்

நபி ஸல் அவர்களின் மக்கா வாழ்க்கையில் ஷிர்கில் ஊறிப்போன காஃபிர்கள் நபி ஸல் அவர்களையும் முஸ்லிம்களையும் பல்வேறு வகையில் சித்ரவதை செய்தாலும் மறுபுறம் நபி ஸல் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது முதல் நெருக்கடியான சூழ்நிலையில் முஸ்லிம்களை பாதுகாப்பு தந்த வரை இவையனைத்தையும் செய்தவர்கள் சில காஃபிர்கள் தான். இவர்கள் கடைசி வரை ஈமான் கொள்ளவில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு பக்க பலமாக இருந்தார்கள் உதாரணமாக அபூதாலிப், இப்னு தங்னா, அபுல் பக்தர் ஆகியோரை குறிப்பிடலாம். நபி ஸல் அவர்களின் குடும்பத்தினரை பள்ளத்தாக்கில் சிறை வைத்த நேரத்தில் ஊருக்குள் இருந்த அபூபக்கர் ரழி அவர்களை எதிரிகள் கடுமையாக தாக்கினார்கள். அப்போது அபூபக்கர் ரழி அவர்கள் துன்பம் தாங்க முடியாமல் ஊரை விட்டும் புறப்பட்ட நிலையில் இப்னு தங்னா என்ற காஃபிர் அபூபக்கர் ரழி அவர்களை சந்தித்து எங்கே செல்கிறீர்கள் என்று கேட்க அதற்கான காரணத்தை கூறிய போது நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம் என் வீட்டில் அடைக்கலம் தருகிறேன். என்று கூறி.. இனிமேல் அபூபக்கருக்கு எந்த துன்பமும் யாரும் தரக்கூடாது என்று மற்றவர்களிடம் அறிவிப்புச் செய்தார். ஆனால் இவர் கடைசி வரை இஸ்லாத்தை ஏற்காதவர் தான். இஸ்லாத்தை ஏற்காத நிலையிலும் முஸ்லிம்களுக்கு இவர்கள் உதவியாக இருந்ததற்கு இவர்கள் கூறிய காரணம் இந்த முஸ்லிம்கள் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அநாதைகளை ஆதரிக்கிறார்கள். அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்கிறார்கள். தன்னிடம் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்குகிறார்கள். ஆகவே இவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

நாம் மனித நேயத்தை வெளிப்படுத்தினால் நம் மீதான அவப்பெயர் நீங்கலாம் என்பத்கான சில சான்றுகள்

இலண்டன் மாநகரில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.  இதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று ஊடகங்கள் திரும்ப திரும்ப ஒலி பரப்பிக் கொண்டிருந்தன. இதை உணர்ந்து அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. முஸ்லிம்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றவும் தொடங்கினார்கள். இந்நிலையில் இலண்டனில் கடந்த ரமழானில் பெரும் தீ விபத்து நிகழ்ந்தது. அது சஹருடைய நேரம் முஸ்லிம்கள் சஹர் செய்து கொண்டிருந்த நேரத்தில் தான் இது நிகழ்ந்தது. உடனே முஸ்லிம்கள் விரைவாக செயல்பட்டு முடிந்த வரை தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினார்கள். இது எந்த அளவு மாற்றார்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் இலண்டனில் பல பகுதிகளில் மாற்றார்கள் முஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்து கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் THANKS FOR RAMAZAN  என்று ஆங்காங்கே பதாகைகள் வைத்ததோடு ரமழான் மட்டும் வந்திருக்கா விட்டால் நாங்கள் பிழைத்திருக்க மாட்டோம். ரமழானில் எங்களுக்கு உதவிய முஸ்லிம்களுக்கு நன்றி.. என்று வாழ்த்தும் அளவுக்கு மாற்றார்களின் மனதில் அந்நிகழ்வு பதிந்தது.

நம் சென்னையில் நாம் எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை ஊடகங்கள் பரப்பிக் கொண்டிருந்த வேளையில் தான் கடந்த வருடம் சென்னை மாநகரம் பெரும் வெள்ளப் பெருக்கை சந்தித்தது. இந்த வெள்ளபாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கு உதவும் பணியிலும் முஸ்லிம்கள் தான் முதலிடத்தில் இருந்தனர். இதை மறுக்க முடியாத நிலையில் ஊடகங்களும் இதை செய்திகளாக வெளியிட்டன. முஸ்லிம்கள் மீதான தவறான அபிப்பிராயங்கள் மாறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மெரீனாவில் கூடிய மக்களுக்கு அத்தியாவசியமான உதவிகள் செய்தது மட்டுமன்றி, அங்கேயே ஜுமுஆ நடத்தியதும் மாற்றாரின் உள்ளத்தை மிகவும் ஈர்த்தது. நான் வண்டியில் சென்று கொண்டிருந்த போது மெரீனாவில் இருந்த திரும்பிக் கொண்டிருந்த நல்ல ஆச்சாரமான தோற்றம் கொண்ட ஒரு ஐயர் வண்டியை நிறுத்தி பாய்.. மெரீனா பீச்சில் உங்களுடைய ஆட்கள் தான் களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். அவர்களுடைய மனிதாபிமானம் என்றைக்கும் மறக்கவே முடியாது என்று புகழ்ந்து விட்டுப் போனார்.

இப்படி ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வுகள் மாற்றாரின் உள்ளத்தை ஈர்க்கிறது என்றால் உலகம் முழுவதும் நம்முடைய மனித நேயப் பணிகள் தொடர்ந்தால் அதன் பின்பு பாசிச வெறி பிடித்தவர்கள் என்ன தான் நம் மீது அவதூறுகளை கூறினாலும் பொது மக்கள் அதை நம்ப மாட்டார்கள்

இஸ்லாம் வளரக் காரணம் அன்றைய முஸ்லிம்களிடம் இருந்த மனித நேயம்

இஸ்லாத்தை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்லி இஸ்லாம் வளர்ந்த து என்று கூறுவதை விட முஸ்லிம்களுடைய நல்ல நடத்தைகளைக் கண்டு மாற்றார்கள் முஸ்லிம்களாக மாறினார்கள் என்று கூறுவதே பொருத்தமாகும். இதை விவேகானந்தர் கூட குறிப்பிட்டுள்ளார். இஸ்லாம் வாளால் பரவியது என்பதை நாம் ஏற்க மாட்டேன். நம் இந்து மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் இஸ்லாத்தை ஏற்றதற்கு காரணம் வணிகம் செய்ய இந்தியா வந்த அன்றைய அரபு வணிகர்களிடம் இருந்த நீதி, நேர்மையைக் கண்டு தான் நம் மக்களில் ஐந்தில் ஒரு பகுதி முஸ்லிம்களாக மாறினர் என்று என் இந்தியா எனும் நூலில் விவேகானந்தர் கூட குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இன்றைக்கு நம் நிலை என்ன..

பாய் என்றாலே வீடு கொடுக்க தயங்குகிறார்கள். நபி ஸல் அவர்களும், தோழர்களும் எத்தகைய மனித நேயத்தை வெளிப்படுத்தினரோ அத்தகைய மனித நேயத்தை அண்டை, அயலாரிடம் நாம் வெளிப்படுத்தியிருந்தால் நமக்கு இந்நிலை வந்திருக்காது.

நபி ஸல் அவர்கள் தம் அண்டை வீட்டில் இருந்த இரண்டு யூதக் குடும்பத்தினருக்கு அவ்வப்போது உணவு கொடுத்தனுப்புவார்கள் என்று அவர்களின் மனைவி சஃபிய்யா ரழி அவர்கள் கூறியுள்ளார்கள்

மனிதர்கள் அனைவரும் சமம் என்ற இஸ்லாமியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற நம் இந்திய முன்னோர்கள்

தென்னிந்தியாவில் மலபார் பிரதேசத்தில் இஸ்லாம் வெகு வேகமாக பரவியது. காரணம் மலபார் ஹிந்துக்களிடையே வெகுகாலமாக ஜாதி பாகுபாடு இருந்தது. அங்கு நாயர் வகுப்பினர் உயர் ஜாதி. புலயர் வகுப்பினர் கீழ் ஜாதி. நாயர்கள் புலயர்களை அசூசையாக கருதுவார்கள். புலயன் ஒருவனின் கை நாயரின் கை மீது பட்டு விட்டால் அந்த நாயர் குளிக்காமல் அடுத்த வேளை உணவை உண்ண மாட்டான். இதனால் நாயர் மீது புலயனின் நிழல் கூட விழக்கூடாது என்று ராஜா உத்தரவிட்டிருந்தார். இந்த சட்டத்திற்கு விரோதம் செய்யும் புலயர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். இத்தகைய அநியாயமான சட்டங்களால் புலயர்களின் உயிர் ஆபத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது. எனவே அவர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது அடிக்கடி வழியில் போலூ.. போலூ.. என்று சப்தமிட்டுக் கொண்டே செல்வார்கள். அதனை நாயர்கள் அறிந்து வழியை விட்டும் ஒதுங்கிக் கொள்வார்கள்.  ஒரு நாயர் புலயனின் சப்தத்தைக் கேட்டு விட்டால் கூ.. கூ... என்று கத்துவான். அதனால் நாயன் வருகிறான் என்று புலயன் அறிந்து கொண்டு வழியை விட்டு ஒதுங்கி நின்று கொள்வான். இந்நிலையில் தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவியவுடன் இத்தகைய புலயர்களைத் தனது இருகரமேந்தி அழைத்துக் கொண்டது. இஸ்லாத்தைத் தழுவியவுடன் அவர்களை எவரும் தாழ்வாக கருதவில்லை. இதற்கு ஒரு வகையில் அரபு முஸ்லிம்களின் மீது உயர்ஜாதி நாயர்கள் வைத்திருந்த நன்மதிப்பும் ஒரு காரணம். ஆகையால் ஆயிரக் கணக்கான புலயர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

ஈ.வெ.ரா. பெரியார் கூறும்போது 5 மணிக்கு ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் 5-05 மணிக்கு தீண்டாமை அவனை விட்டும் நீங்கி விடும். இவ்வளவு சீக்கிரமாக தீண்டாமை வேறு எங்கேயும் நீங்குவது கிடையாது.

மன்னர் கஜினி முஹம்மது என்ற மஹ்மூத் கஜ்னவீ ஆட்சி செய்த காலத்தில் அவருடைய மகன் ஒரு மாற்று மத த்தவருக்கு அநீதி இழைத்து விட்டார். பாதிக்கப்பட்டவர் மன்னரிடம் வந்து உங்களுடைய மகன் என்னிடம் 60 ஆயிரம் திர்ஹம் அளவுக்கு சரக்கை வாங்கிக் கொண்டு இன்னும் பணம் தரவில்லை. அது இருந்தால் தான் என்னால் ஊருக்கு திரும்ப முடியும் என்றார்.  உடனே மன்னர் தன் மகனை அழைத்து அந்த 60 ஆயிரம் திர்ஹத்தை உடனே கொடு... இல்லையென்றால் உன்னை நானே நீதி மன்றத்தில் நிறுத்துவேன் என்றார். வேறு வழியில்லாமல் இளவரசர் தன் கேஷியரை அழைத்து என் பணம் மொத்தம் எவ்வளவு இருக்கும் என்றார். அதற்கு அவர் 20 ஆயிரம் திர்ஹம் மட்டுமே இருக்கிறது என்றார். அதை தந்தையிடம் கூறி, இப்போதைக்கு இதை தந்து விடுகிறேன் பிறகு மீதி திர்ஹத்தை தருகிறேன் என்று கூற அதை மன்னர் ஏற்கவில்லை. நீ என்ன செய்வாயோ எனக்கு தெரியாது. 60 ஆயிரம் திர்ஹத்தை நீ அவருக்கு உடனடியாக கொடுக்கும் வரை என் முகத்தில்நீ விழிக்காதே என்று கண்டிப்பான முறையில் கூறி விட்டார். இளவரசர் வேறு வழியின்றி அங்குமிங்கும் கடன் வாங்கி மொத்த பணத்தையும் கொடுத்தார் 

முடிவுரை-மனித நேயம் என்ற பெயரிலும், மத நல்லிணக்கம் என்ற பெயரிலும் பலர் ஈமானையே இழந்து மாற்றார்களுடன் ஐக்கியமாகி விடுகிறார்கள். நமக்கு ஈமான் உயிர் போன்றது, ஆகவே அத்தகைய ஈமானுக்கு மாற்றமில்லாத வகையில் மாற்றார்களுடன் மனித நேயத்தைப் பேணுவது மட்டுமன்றி, அதை வெளிப்படுத்திக் காட்ட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அப்போது தான் நம் மீதான அவப்பெயர் நீங்கும். அது மட்டுமன்றி ஒவ்வொரு பள்ளிவாசலின் வெளிப்பகுதியில் பெரிய கரும்பலகை வைத்து இஸ்லாம் வலியுறுத்தும் மனித நேய கருத்துக்களை தினமும் ஒன்று என்ற அடிப்படையிலும் எழுதலாம்

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (8)الممتحنة

© 2018 All Rights Reserved.
http://ulama.in/